-த.சுபேசன்-
வடக்கு மாகாணத்திலுள்ள வளங்கள் திணைக்களங்களுடைய அசமந்தம் காரணமாக தென்பகுதிக்கு முறைகேடான விதத்தில் எடுத்துச் செல்லப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.
தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த நிலையில், தென்மராட்சி பகுதியில் இடம்பெறுகின்ற கல் அகழ்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தென்மராட்சி சரசாலைப் பகுதியில் பிரதேசசபையின் உத்தரவையும் மீறி கல் அகழ்வு மற்றும் அதற்கான கல் உடைக்கும் ஆலை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது. இது தொடர்பாக பிரதேசசபை உடனடியாக நீதிமன்றத்தினை நாட வேண்டும்.
சாதாரண மக்கள் விவசாய நடவடிக்கைக்காக கல் அகழும் போது அவர்கள் மீது சட்டம் பாய்கின்றது. அதே செயலை பாரிய நிறுவனங்கள் பெரிய அளவில் செய்யும் போது பாராமுகமாக இருக்க முடியாது. சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
அத்துடன் அகழ்ந்த கல்லை வேறு பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வழித்தட அனுமதியும் பெறப்பட வேண்டும்.
பல இடங்களில் அனுமதி இன்றி பெருமளவில் கல் அகழ்வு இடம்பெறுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்படைகின்றனர். வீதிகள் பாதிப்படைகின்றன. எமது வளமும் முறைகேடான முறையில் எடுத்துச் செல்லப்படுகின்றது என்றார்.


















