-த.அம்பிகாவதி-
வடமத்திய மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும், முன்னாள் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருமான திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையிலான, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்து செயலகத்தின் உற்பத்தி திறன் செயற்பாடுகளை பார்வையிட்டனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உற்பத்தி திறன் செயற்பாடுகள் சம்பந்தமான முன்வைப்பு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக கிளைகள் தோறும் கையாளப்படும் உற்பத்தித்திறன் தொடர்பான நுட்பங்களையும் பொறிமுறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
வட மத்திய மாகாண விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்களது வருகை தொடர்பாக இரண்டு தரப்பினராலும் ஞாபகார்த்த சின்னங்கள் பரிமாற்றப்பட்டமை சிறப்பம்சமாகும். நிகழ்வினிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சீரணி நாகம்மாள் ஆலயத்துக்கு சென்றிருந்த உத்தியோகத்தர்கள் அங்கு இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.















