-முதுகெலும்பற்ற செயல் என கஜேந்திரகுமார் காட்டம்-
மாகாண நிழல் அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நியமனம் இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கடந்த 10 ஆம் திகதி மாகாண சுகாதார அமைச்சின் கூட்டம் நடைபெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா அந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க வடக்குக்கு வந்த போது நிழல் மாகாண அமைச்சர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் கூட்டங்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்று ஆளுநருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
சுகாதாரத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா, கல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்கள் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், விவசாயம் மற்றும் கால்நடைக்கு பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் என்ற அடிப்படையில் மாகாண நிழல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மாகாண சபைகள் இல்லாத நிலையில் வடக்கில் ஏதேனும் கூட்டம் இடம்பெறுமாயின் அதற்கு சகல கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும். எவ்வாறு ஸ்ரீ பவானந்தாராஜாவை மாத்திரம் அழைக்க முடியும். இந்த அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது.
அரசாங்கம் ஒருபுறம் மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மறுபுறம் ஜனநாயக விரோதான முறையில் தமது உறுப்பினர்களை நியமித்துள்ளது. பிரஜா சக்தி முறைமையை அரசியலாக்கியுள்ளது. இது முதுகெலும்பு இல்லாத கேவலமானதொரு நிலைமை. மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்பு என்று இவர்கள் உலகுக்கு காட்டினார்கள். ஆனால் தற்போது திருட்டுத்தகமான மாகாண சபைக்கு தமது உறுப்பினர்களை நிழல் அமைச்சர்களாக நியமித்துள்ளார்கள் என்றார்.
















