-க.கனகராசா-
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்திற்கு இணையாக செயற்படுத்தப்படும் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திட்டத்தின் கீழ் மீள கட்டி எழுப்பப்படவுள்ள ராஜ கிராமத்தின் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் திருமதி உமாமகள் தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திட்டத்திற்கான பெயர் பலகையை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி செயலர், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக செயலர்கள், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக அதிகாரிகள், மாகாண கிளீன் ஸ்ரீலங்கா ஒருங்கிணைப்பாளர் கபிலன், வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபை தவிசாளர் லவன், பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் ரமணன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை உறுப்பினர் நிரோஷன், கரவெட்டி பிரதேச வைத்தியாசலை பொறுப்பதிகாரி வே. கமலநாதன் ராஜ கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த ராஜ கிராமம் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய வீடமைப்பு திட்டத்தில் உருவாக்கப்பட்டது. அந்த வீடுகள் தற்போது பழுதடைந்துள்ளன. இந்நிலையிலேயே குறித்த ராஜ கிராமம் மீள கட்டியெழுப்பப் படவுள்ளதுடன் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், உட்பட பல அபிவிருத்திகள் இடம்பெறவுள்ளன.


















