-த.சுபேசன்-
விவசாயத்தையும், கடற்தொழிலையும் வெறுமனே வயிற்றுப் பிழைப்பிற்கான தொழிலாகப் பார்க்காமல், வளர்ச்சிப் பாதைக்கான வணிகமாக மாற்ற வேண்டுமென வட மாகாண விவசாய மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ச.சிவஸ்ரீ தெரிவித்தார்.
யாழ்.நகரில் ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
இளைஞர்கள் தொழில் முனைவோராக வரும்போது நாட்டில் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.வடக்கு மாகாணம் விவசாயம் மற்றும் கடற்றொழிலில் அதிகம் தங்கியுள்ளது. வடமாகாணத்தில் விவசாயம் மற்றும் கடற்றொழில் சார்ந்த துறைகளில் அதிக வாய்ப்புகளும் உள்ளன. இலங்கையிலேயே மிக அதிகமான கடல் எல்லையைக் கொண்ட பகுதியாக வடமாகாணம் விளங்குகின்றது.இருப்பினும், இந்த இயற்கை வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
நெல் உற்பத்தியில் வடமாகாணம் ஏனைய மாகாணங்களை விடப் பின்தங்கியுள்ளது.விவசாயிகள் விவசாயம் சார்ந்த உயர்கல்வியை; இங்கு பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைமை இல்லை. இன்றைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து, சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
தற்போதைய பொருளாதார நிலையில் இலங்கையின் 9 மாகாணங்களில் பொருளாதார ரீதியாக வடமாகாணம் கடைசி இடத்தில் உள்ளது.
எனவே புதிய தொழில் வல்லுநர்களையும் தொழில் முனைவோரையும் உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும் என மேலும் அவர் தெரிவித்தார்.


















