-ஆளுநர் செயலகம் முன் மக்கள் போராட்டம்-
அரசாங்கத்தினால் 2019ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான மீதிக் கொடுப்பனவை வழங்கவோரி ஆளுநர் செயலகம் முன் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.
நேற்று காலை இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கூறுகையில், இன்றைய ஆளுநர் மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் அதாவது 2019ம் ஆண்டு காலப்பகுதியில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்கப்படவில்லை. இதனால் அக்காலப் பகுதியில் வீட்டுத் திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திவரும் நிலையில் மழை காலங்களில் இருக்க இடம் இல்லாமல் அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.
அரசாங்கம் பாரபட்சமற்ற அரசாங்கம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்காமல், தங்களது ஆட்சியில் புதிய வீட்டுத் திட்டங்களை வழங்குகிறார்கள். இது பாதிக்கப்பட்ட எமக்கு மிகவும் மன வேதனையை தருவதோடு தற்போதைய ஆளுநர் கூட இது தொடர்பில் மௌனமாக இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.
யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வீதியில் நடந்து திரிகிறார். ஆனால் மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கி உள்ளோரை சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.
ஆகவே எமது பிரச்சனை தொடர்பில் ஆளுநருக்கு மீண்டும் தெரியப்படுத்தியுள்ளோம் எமது பிரச்சினையை விரைந்து தீர்க்காவிடின் எமது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.


















