-மானிப்பாய் தவிசாளர்-
-கஜிந்தன்-
வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்தார்.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று காலை ஆரம்பமான நிலையில் சபை உறுப்பினர் பகீரதன்,வெடி கொழுத்துவதற்கு எதிரான யோசனை தீர்மானமாக எடுக்கப்படவில்லை. அது கடந்த கூட்டத்தில் வெறுமனே பேசப்பட்டது நிலையில் வெளியே இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டதாக பேசப்படுகின்றது.
இந்நிலையில் சுமார் 15 நாட்களுக்கு முன்னர் எமது வட்டாரத்தில் மரணச் சடங்கு ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில் மரணச் சடங்கின்போது வீதியில் வெடி கொழுத்துவதற்காக, பிரதேச சபையில் பேசப்பட்டது போலவே சபைக்கு கட்டணமாக 10 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
அந்த 10 ஆயிரம் ரூபாவானது, வெடி கொழுத்தும் குறித்த பகுதியை சுத்தம் செய்வதற்காகவே அறவிடப்படுகிறது. ஆனால் குறித்த மரணச் சடங்கு இடம்பெற்று 15 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை அந்த இடம் சுத்தம் செய்யப்படவில்லை என்றார்.
அத்துடன் குறித்த பகுதியை தாங்களே சுத்தம் செய்வதாக மக்கள் கூறினால் அந்த 10 ஆயிரம் கட்டணம் சபைக்கு செலுத்தாமல் விடலாமா எனவும் கேள்வியெழுப்பினார்.
இவ்வாறான நிலையிலேயே தவிசாளர், வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆகையால் சபையே அவற்றை செய்ய வேண்டும். நான் இந்தியாவில் இருந்ததால் குறித்த விடயம் தொடர்பாக எனக்கு தெரியவில்லை. எனவே குறித்த பகுதியை விரைவில் சுத்தம் செய்வோம் என பதிலளித்துள்ளார்.


















