-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்-
-த.அம்பிகாவதி-
வேலை வாய்ப்புக்களற்ற இளைஞர்கள், யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்க முன்வருமாறு துறை சார்ந்த தரப்பினருக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான கருத்துப் பகிர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோதே மேற்கண்ட அழைப்பை விடுத்திருந்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் உயர்தரத்தில், சாதாரண தரத்தில் சித்தியடைந்த இளைஞர் யுவதிகள் வேலைகளுக்கான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மாவட்டத்தில் பல தொழில் தருநர்களிடம் வேலைவாய்ப்பு காணப்படுவதாகவும் மேலும் பல முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்யவுள்ளதால் வேலை வாய்ப்புக்கள் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்ததுடன் தொழில் தருநர்களுக்கும் வேலையற்றிருப்பவர்களுக்கும் ஒர் இடைவெளி காணப்படுவதாகவும், ஆதலால் வேலையற்றவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இளைஞர், யுவதிகளிடம் தெளிவற்ற அல்லது உரிய வழிகாட்டுதல்கள் இல்லாமலிருப்பதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தொடர்புடைய தரப்பினர் தொழில் வழிகாட்டுதல்களையும் விழிப்புணர்வையும் வழங்க வேண்டும். மேலும் மாவட்டச் செயலகத்தினால் இதற்கான முன்னெடுப்புக்கள் விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.


















