-இ.கலைஅமுதன்-
வடமாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளும் எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையாக புனரமைப்பு செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் ஆரம்ப நிகழ்விலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், நான் யாழ்.மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இந்த வீதிக்கு விடிவு கிடைத்திருக்கின்றது.
காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் இந்த மோசமான வீதியூடாகவே சுற்றுலாவிகள் கசூரினா கடற்கரைக்கு வந்து சென்றனர்.
இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாவிகளின் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.
அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடரால் எமது மாகாண வீதிக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் நடவடிக்கையால் வீதிகளைத் சீர்செய்வதற்கு உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டது. தற்போது அவற்றை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழேயே நடைபெறுகின்றன. எனவே, அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கின் வீதிப் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என நம்புகின்றேன் – என்றார்.


















