தொலைபேசிகள் ஊடாக வரும் கடன் தொடர்பிலான விளம்பரங்களை நம்பி கடன் பெறுபவர்கள் பல பிரச்சினைகளில் சிக்கும் ஆபத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக நாட்டில் நாளாந்தம் ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவர் பணத்தை இழந்து கொண்டிருக்கின்றனர்.
இணையத்தளங்கள் அல்லது தொலைபேசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையைக் காண்பித்து கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டன.
இத்தகைய கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் வழங்கப்படுவதில்லை.
இதனால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுப்பதுடன் கடன் பெற்றதன் பின்னர் விதிக்கப்படும் நிபந்தனைகளால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகுவதாகவும் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதியப்பட்டுள்ளன.
மேலும் நிறுவனங்கள் என்ற பெயரில் பல போலி அழைப்புக்கள் ஊடாக மக்களிடமிருந்து தனிப்பட்ட தகலவல்கள் வங்கித்தகவல்கள் வங்கி இரகசிய இலக்கங்கள் போன்ற சூச்சுமமான வகையில் பெறப்பட்டு பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
சில நிறுவனங்கள் கடனை மீளப்பெறும் கட்டத்தில் அதிகளவிலான வட்டிகளை வசூலிக்கின்றன. வாங்கிய கடனுக்கு நிகராக வட்டிசெலுத்திய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இவ்வாறான பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் கிழ் செயற்படுவதில்லைஎனவும் தெரியவந்துள்ளதால் குறித்த நிறுவனங்கள் ஊடான மோசடிகளில் சிக்கும்போது நிதியிழப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக உடனடியாக கடன் பெறும் போது மக்கள் நிறுவனம் குறித்த தகவல்களை அறிந்து கடன் வழங்கும் நிபந்தனை குறித்து அவதானத்துடன் அறிந்து கடன்களை பெற்றுக்கொள்வதால் மக்கள் தங்களை பாதுகாக்கமுடியும்.


















