போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து பாதாள உலகம் வளர்ந்துள்ளதாக தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார போதைப் பழக்கத்தால் நாடு பில்லியன் கணக்கான டொலர்களை இழந்து வருகின்றதானவும் குறிப்பிட்டார்.
முதலாவது தன்னார்வ மறுவாழ்வு மையத்தின் திறப்பு விழா வெலிகந்த நவ சேனாபுர நவோத திரிதியா மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையம் ஆகியவற்றின் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்,
போதைக்கு அடிமையானவர்கள் தாமாக முன்வந்து மறுவாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும். போதைப்பொருள் இல்லாத தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், போதைக்கு அடிமையானவர்கள் தாமாக முன்வந்து மறுவாழ்வு பெற வாய்ப்பு உள்ளது.
நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க, தேவை மற்றும் விநியோகத்தை நிறுத்த வேண்டும். விநியோகத்தை நிறுத்தும் பணிகள் தற்போது பொலிஸாராலும் மற்றும் தரப்புகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னர் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டுமே போதைப்பொருட்களை ஒழிப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இப்போதுள்ள அரசாங்கம் இந்த அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு தேசிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து பாதாள உலகம் வளர்ந்துள்ளது. போதைப் பழக்கத்தால் நாடு பில்லியன் கணக்கான டொலர்களை இழந்து வருகின்றது.
தற்போது சிறையில் உள்ள 23,000க்கும் மேற்பட்டவர்களில் 15,000க்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர்.
மறுவாழ்வு பெற்ற தனிநபர்கள் மீது சமூகத்தில் நேர்மறையான அணுகுமுறை இல்லாததால், மறுவாழ்வு என்ற வார்த்தையே மாற்றப்பட வேண்டும் என்றார்.
போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருக்குத் தேவையானது ஆலோசனை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


















