மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார். அத்துடன் பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல் முறைமையை நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை கடந்த அரசாங்கமே இடைநிறுத்தியது. குறித்த தேர்தலை புதிய தேர்தல் முறைமையில் நடத்துவதற்கு கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதனை முறையாக மேற்கொள்ளாமல் ஏற்கனவே இருந்த தேர்தல் முறைமையை நிறுத்திவிட்டனர். இதனாலேயே தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியவில்லை என்பதால் அடுத்த வருடத்தில் பழைய தேர்தல் முறைமையிலாவது தேர்தலை நடத்துவோம்.
அதாவது அவர்கள் செய்த தவறை திருத்திக் கொண்டு பழைய தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டு பழைய விகிதாசார முறைமையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.


















