இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கச்சதீவு சர்ச்சை தொடர்பில் மௌனம் காத்தார்.
இந்தியா சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூர்ய டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதன்போது தற்போது இந்தியாவில் கச்சதீவை மீளவும் மீட்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர்களுக்கு இடையே பேசப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி,
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஆனாலும் இச் சந்திப்பில் கச்சதீவு குறித்து பிரதமர் மோடி பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கவில்லை.
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும் இந்தியா வந்துள்ள இலங்கைப் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் இந்திய, இலங்கை அரசியல்வாதிகள் அண்மையில் கச்சதீவு தொடர்பில் சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















