நுவரெலியா – கிரிகரி வாவிக்கு அருகில் 4வது வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வை சுற்றிவளைத்த பொலிஸார் போதைப் பொருட்களுடன் 30 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த பேஸ்புக் களியாட்டம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை வரை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விசேட தேடுதல் நடவடிக்கைகள், நுவரெலியா பிரதான நகருக்குள் நுழையும் அனைத்து பிரதான வீதிகளையும் மறித்து சோதனைச் சாவடிகள் அமைத்து, மோப்ப நாய்களின் துணையுடன் நடைபெற்றுள்ளது. போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குஷ;, கஞ்சா, ஐஸ், சிகரெட்டுகள், போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் மாவா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 35 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கம்பஹா, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மருதானை, கிராண்ட்பாஸ், பேலியகொடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



















