நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என மன்னிங் சந்தை வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மன்னிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். எம். உபசேன இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலை உயரும் என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால் தோட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்த வாரங்களில் மரக்கறி விலை உயரும் என்பது உறுதி. வானிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதே விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணியாக உள்ளது என்றார்.
தற்போதைய விலை நிலவரம் (கிலோவுக்கு):
கரட்: ரூ. 100
கோவா: ரூ. 50
தக்காளி: ரூ. 100
கறிமிளகாய் : ரூ. 300
பீன்ஸ்: ரூ. 150 முதல் ரூ. 200 வரை
பச்சை மிளகாய்: ரூ. 250 முதல் ரூ. 300 வரை
இந்த விலைகள் விரைவில் மாறும் என்றும் அவர் கூறினார்.
பதுளை மாவட்டத்தின் வெலிகடை, கெப்பட்டிபொல மற்றும் ஹபராகல போன்ற பகுதிகளிலுள்ள மரக்கறிப் பயிர்கள் மோசமான வானிலையால் அழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, சந்தைக்கு வரும் மரக்கறிகளின் வரத்து குறைந்து, எதிர்வரும் நாட்களில் மரக்கறியின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது.


















