வலுசக்தி அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய சுதந்திர தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த கமகே தாக்கப்பட்டதுடன், தொழிற்சங்க உறுப்பினர் பிரியந்த மதுகுமாரவை அறையில் அடைத்துவைத்து தொலைபேசியிலிருந்த தகவல்ளை அழித்ததாக கூறியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, இந்த சம்பவத்தை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் 23,000 ஊழியர்கள் சார்பாக கடந்த காலங்களில் வீதியில் இறங்கிய மக்கள் விடுதலை முன்னணி, இன்று தொழிற்சங்க உறுப்பினர்களைத் தாக்கியமை குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் உரிமைகளுக்காக, அரச நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக, அன்று தொழிலாளர்களை வீதிக்கு இறக்கிய தற்போதைய ஆளும் தரப்பினர், இன்று, தொழிற்சங்க அங்கத்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். இது சட்டவிரோதமான செயலாகும். இந்த விவகாரம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையொன்று அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையினுள் ஐக்கிய மக்கள் சக்திக்கு தொழிற்சங்கமொன்று இல்லை. இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.


















