காடழித்தவர்களை பாதுகாப்பது என்.பி.பி அரசின் கொள்கையா?
தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கவும், வடமாகாணத்தில் உள்ள காடுகளை அழிக்கவும்தான் மகாவலி அதிகாரசபை உருவாக்கப்பட்டதா? என ஜனாதிபதியிடம் நிச்சயமாக கேட்பேன் என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், வவுனியா – வடக்கில் காடழித்தவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கொள்கையா என கேட்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மகாவலி (எல்) வலயம் ஊடாக அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் விவசாய காணிகள் மற்றும் குடியிருப்பு காணிகள் சுமார் 4000 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளில் பெருமளவு காணிகள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் மிகுதிக் காணிகள் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன.
இதற்கு நடுவில், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் வனவளத் திணைக்களம் தமிழ் மக்கள் தங்கள் காணிகளை உழுவதற்கு முயன்ற சமயம் நாங்களும், மாவட்டச் செயலர், பிரதேச செயலர், கமலநல அதிகாரிகளின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இப்படி மகாவலி அதிகாரசபை, வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என அனைத்து அரசாங்க திணைக்களங்களும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கவும், காடுகளை அழிக்கவுமா உருவாக்கப்பட்டுள்ளன என்ற கேள்வியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்பேன். கட்சி சார்பாக ஜனாதிபதியுடன் பேச நேரம் கேட்கப்பட்டுள்ளது.
அந்த சந்திப்பில் வாய்ப்பிருந்தால் கேட்பேன் அல்லது ஒரு பொது நிகழ்வில் ஜனாதிபதியிடம் இதை நிச்சயமாக கேட்பேன், அதேபோல் வவுனியா வடக்கு திரிவைத்தகுளத்தில் சுமார் 1000 ஏக்கர் காட்டை அழித்துள்ளார்கள். வேட்டிய மரங்கள் எங்கே சென்றன என்பது தெரியவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஆகவே காடழித்த குற்றவாளிகளை பாதுகாப்பது
அரசாங்கத்தின் கொள்கையா? என்ற கேள்வியை நிச்சயமாக ஜனாதிபதியிடம் கேட்பேன். இயற்கையை பாதுகாக்கவேண்டும் என ஜனாதிபதி சொல்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில் காடழித்தவர்களுக்கு தண்டணை இல்லை என்றால், காடழித்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றால் இதுதான் அரசாங்கத்தின் கொள்கையா? அதை நான் ஜனாதிபதியிடம் கேட்டு தெரிந்து கொள்வேன் என்றார்.


















