காலநிலை மாற்றம் காரணமாக நாகை – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் இடைநிறுத்தப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சுபம் கப்பல் நிறுவனம் தென்னிந்தியாவின் நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது. இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் நவம்பர் மாத இறுதிக்குள் நாகை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் பருவநிலை மாற்றம் ஏற்படும். இதனால், கடல் சீற்றம் மற்றும் காற்று காரணமாக கப்பல் இயக்குவதில் சிக்கல் உள்ளது. ஆகவே நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படாது.
கடந்த 30 ஆண்டுகளின் காலநிலை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















