சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற ‘கலாநிதி ரொனால்ட் சில்வாவிற்கு அப்பால் – இலங்கையின் கலாசார பாரம்பரியத்தில் புதிய திசைகளை வகுத்தல்’ எனும் தொனிப்பொருளிலான 2025 தேசிய மாநாட்டின் ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டு உரையாற்றுக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த பிரதமர்,
எமது அரசாங்கத்தின் நோக்கம், இனத்துவம் , மதம், மொழி அல்லது இருப்பிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாத சகல குடிமகனின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே ஆகும்.
இலங்கையின் மரபுரிமையானது அனைவருக்கும் சொந்தமானது அதைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும். நாடெங்கும் இருக்கின்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகத்தக்க மரபுரிமைத் தலங்களைப் பாதுகாப்பதற்கு, புதிய தொழில்நுட்பம், டிஜிட்டல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலையை மாற்றியமைக்கும் உத்திகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்.
மத்திய கலாசார நிதியம் , நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச சபை ஆகியவை சிறப்பாக பணியாற்றினால் இலங்கையின் மரபுரிமைகள் எதிர்நோக்கும் உலகளாவிய சவால்களிலிருந்து அவற்றை பாதுகாப்பதற்கும், எதிர்கால சந்ததியினருக்காக கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பாக கையளிக்கவும் உதவும் எனத் தெரிவித்தார்.


















