கிண்ணியாவுக்கும் – குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
தற்போது குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதனால், பொதுமக்களின் நன்மை கருதி இந்தப் படகுச் சேவை தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களில் பாலத்தின் முழுமையான கட்டட நிர்மாண வேலைகள் நிறைவடையவுள்ள நிலையில், அதுவரைக்கும் இந்தப் படகுப் பாதையின் சேவை செயற்பட உள்ளது.
இந்தத் தற்காலிகப் படகுப் பாதைக்கும், அதன் பராமரிப்புச் செலவிற்கும் இரண்டு வருடங்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற படகு சேவை காரணமாக 2021 ஆம் ஆண்டு, ஒரு தனியார் படகு ஆற்றில் கவிழ்ந்து, ஐந்து மாணவர்கள் உட்பட, 8 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு முக்கியத்துவம் அளித்து சொகுசு இயந்திரப் படகு ஒன்று நேற்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















