இலத்திரனியல் வீசா வழங்கல் தொடர்பில் அரசாங்கம் கணக்காய்வை நடத்த தயாரா? ஏனக் கேள்வி எழுப்பியிருக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சட்டம் அனைவருக்கும் சமம் என ஜனாதிபதி கூறுவது உண்மை என்றால் தனது சகா டிரான் அலஸிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறினார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்திய நிகழ்நிலை முறைமையிலான இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் கணக்காய்வினை மேற்கொள்ளுமாறு 2024.07.12 ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழு தேசியக் கணக்காய்வுத் திணைக்களத்திடம் வலியுறுத்தியது. தேசிய கணக்காய்வுத் திணைக்களம் கடந்த 3 ஆம் திகதி அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2024.07.28 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்தோம். இந்த வழக்கில் பங்குதாரராகுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களிடமும் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. அடிப்படை உரிமைமீறல் வழக்கை உயர்நீதிமன்றம் 2024.06.02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இலத்திரனியல் விசா விநியோக முறைமை இடைநிறுத்தி, பழைய முறைமைக்கு அமைய விசா விநியோகிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அமுல்படுத்தாத காரணத்தால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தோம்.
இந்த வழக்குக்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு உயர்நீதிமன்றம் மூன்று வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டினால் அரச வருவாய் இழக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய அரசியல் தரப்பினர், அரச அதிகாரிகள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இது அக்கினி பரீட்சை என்றே குறிப்பிட வேண்டும்.
இலத்திரனியல் விசா முறைமை அமுல்படுத்தப்பட்டபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ் பதவி வகித்தார். உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள மனுவில் இவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிடும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசியல் சகாவான டிரான் அலஸிற்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முடிந்தால் இதைச் செய்யுங்கள் என்று நான் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பேசினார்.
சிறு சிறு ஊழல் மோசடிகளுக்கு சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதைப் போன்று, இந்த விசா விநியோகத்தால் அரசுக்கு ஏற்பட்ட பில்லியன் டொலர் கணக்கிலான நிதி குறித்தும் விசாரணைகளை நடத்தி சட்டத்தை செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


















