-சுவிற்சர்லாந்து தூதுவருடனான சந்திப்பில் சுமந்திரன் தெரிவிப்பு-
-ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கையை இழுத்தடிப்பதாகவும் சுட்டிக்காட்டு
இலங்கையில் கூட்டாட்சி முறைமையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழ்கட்சிகளுடன் பேசுவதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை – சுவிற்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிற்சர்லாந்து அரசாங்கம் நடத்திய ‘கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம்’ பற்றிய செயலமர்வு கடந்த மாதம் இடம்பெற்றிருந்தது.
இச் செயலமர்வின்போது சுவிற்சர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
செயலமர்வின் ஓரங்கமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க, 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இச்செயலமர்வு தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ற்றின் அழைப்பின்பேரில் புதன்கிழமை கொழும்பிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நடைபெற்ற சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு தாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ள போதிலும், அதற்கு இன்னமும் பதில் கிட்டவில்லை எனச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இதுகுறித்து சுவிற்சர்லாந்தில் நடாத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


















