-சி.ஜெகதீஸ்வரன்-
இந்தியாவில் இடம்பெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த ஹாட்லிக் கல்லூரி மாணவனும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக வீரருமான சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றிருந்தார்.
வடமராட்சி மண்ணின் மைந்தனான மிதுன்ராஜின் சாதனையைப் பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் பருத்தித்துறையில் நாளை சனிக்கிழமை பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பருத்தித்துறை சித்தி விநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில் இறை வழிபாடு நடைபெற்றவுள்ளது.
இதையடுத்து திறந்த வாகனத்தில் சாதனை வீரன் மிதுன்ராஜ் ஏற்றி மங்கல வாத்திய மரியாதையுடன் சூரியமஹால் திருமண மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டு மதிப்பளிப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் பிரதம விருந்தினராகவும் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் யோகாசன ஆசான் ம.இரத்தினசோதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















