-இ.கலைஅமுதன்-
யாழ். மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ். மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும், வட மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் குறித்த மோசடிக்கு மாநகர சபையின் சில அதிகாரிகளும் துணை போயுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
யாழ்.மாநகர சபையின் முன்னைய கட்டிடத்திற்கு கிழக்குப் பக்கமாக இருந்த வாசலுக்கு எதிராக ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்தக் கட்டிடமும் மாநகர சபையின் அலுவலகமாக இருந்தது. அது ஒரு கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடம். ஆனால் அண்மையில் அதனை தற்செயலாக பார்த்தபோது அது மாநகர சபையினுடைய சொத்து என்ற நிலையில் இல்லாமல் வேறு பலர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் இருந்தது. அதை ஆராய்ந்த பொழுது அந்த சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டதாக நம்பகரமாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.
குறித்த காணி தனியாரின் காணியாக இருந்தது. யாழ். மாநகர சபை, நகர சபையாக இருந்த காலத்தில் அந்த கட்டிடம் தேவை கருதி கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் புத்தகத்திலே கொள்வனவு செய்த கட்டிடங்கள் என்று பட்டியலில்
களஞ்சியசாலை வசதிக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக கடந்த 23ஆம் திகதி மாநகர சபை ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.
குறித்த கடிதத்தில், இந்த மோசடிக்கு மாநகர சபை அதிகாரிகளின் ஒத்தாசை இருப்பதாகவே தெரிகிறது.
உடனடியாக இந்த விடயத்தில் ஆணையாளர், ஆளுநருடன் கதைத்து புதிதாக உருவாக்கப்பட்ட பொலிஸாரின் விசேட பிரிவில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலேயே இந்த விடயத்தை முறைப்பாட்டை செய்ய வேண்டும். இந்த மோசடிக்கு துணை போனவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றார்.


















