நுகேகொடவில் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து, குறைந்தது இரு வாரங்களுக்காவது விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருவதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்:
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வரவழைக்கப்பட்ட அரச சார்பற்ற அமைப்பொன்றின் செயற்பாட்டாளர் ஒருவரினூடாக, எனக்கெதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் சுட்டிக்காட்டிய தவறை உடனடியாக திருத்திக்கொள்வதற்கு பதிலாக, ஊழலை வெளிப்படுத்துபவர்களை ஊழல், மோசடி விசாரணை சட்டத்தை பயன்படுத்தியே கட்டுப்படுத்தி மௌனிக்கச் செய்யும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
இதன் பிரகாரம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி நுகேகொடவில் இடம்பெறவுள்ள மக்கள் குரல் பேரணிக்கு முன்னர், குறைந்தது இரு வாரங்களுக்காவது என்னை விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருகிறது.
இதற்கு முன்னரும் பலமுறைகள் என்னை கைதுசெய்வதற்கு அரசாங்கம் முயற்சித்திருந்தாலும் அந்த அடிப்படையற்ற கைது முயற்சிகளை சட்ட மா அதிபர் மற்றும் நீதிமன்றத்தின் தலையீட்டில் தோற்கடிக்க எங்களால் முடிந்தது. எனவே, இம்முறையும் சிறைக்குச் சென்று எனக்கிருக்கும் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நானும் தயாராகவே இருக்கிறேன்.
தென் மாகாணத்திலிருக்கும் அமைச்சர் ஒருவருக்கு என்னை சிறையிலடைக்கும் வரை நித்திரை வராதாம்.அவரும் பாவம். அப்பாவி ஒருவரின் தூக்கத்தை கெடுத்து அவரை நோயாளராக்க எனக்கு விருப்பமில்லை. அரசாங்கத்திலுள்ள தலைவர்கள் மீது கரிசனை செய்து அரசாங்கத்தின் செலவில், அரசாங்கத்தின் விருந்தினராக சிறிது காலம் கழிப்பதற்கு நானும் தயாராக இருக்கிறேன். அதனூடாக அரசாங்கத்துக்கு இருக்கும் நோய் குணமாகுமென எதிர்பார்க்கிறேன்.


















