-கஜிந்தன்-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடல்ப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 185 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகினர்.
இக் கைது நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
நாடு முழுவதும் “போதையில்லா நாடு ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை என்ற தொலைநோக்குப் பார்வை” தொனிப் பொருளில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய வடக்கு கடற்படை கப்பல் வசப நிறுவனத்துடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு கடலோர ரோந்து பணியில் ஈடுபட்டது.

இதன்போது நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதைக் கவனித்து சோதனை செய்யப்பட்டது.
அந்த நேரத்தில், அந்த டிங்கி படகில் 6 பைகளில் 85 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 185 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 41 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.


















