இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4 ஆயிரத்து 141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சம்பவம் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆறு மாத கால ஒருங்கிணைப்பு பயிற்சி பாடநெறிக்காக அறிவியல் துறையில் 700 தாதியர் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, சமீப காலங்களில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு 4,141 தாதிய அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் சேவையில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேலும் 2 ஆயிரத்து 600 பேரை தாதியர் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தாதியர் சேவையில் தற்போது சுமார் 43,500 பேர் சேவையில் இருப்பதாகவும் அமைச்சர மேலும் தெரிவித்துள்ளார்.


















