பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் இல்லாமல் போகும்போது அரசியல் கட்சிகளில் பிரச்சினைகள் உருவாவது சகஜமாகும். எல்லா கட்சிகளிலும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை ஆட்சி இருந்தாலும் பிரச்சினைகள் இருக்கிறது. கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு செல்லும் வரை காத்திருந்து, கல்வியமைச்சினால் ஆசிரியர்கள் சம்மேளனம் நடத்தப்பட்டது. ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு – அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ஹரிணிக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கவில்லை.
வரலாற்றை எடுத்து நோக்கினால் தேசிய நிகழ்வொன்றில் பிரதமருக்கு உரை ஒன்றை வழங்குவது வழமையாகும். பிரதமர் ஹரிணியை ஒதுக்கி ஒரு பொம்மையாக வைத்திருக்க அரசியல் சூழ்ச்சி செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நல்ல திட்டங்கள் ஏதும் கொண்டு வந்தால் அது தேசிய மக்கள் சக்தியின் திட்டம் அல்லது பெலவத்தவின் திட்டம். ஆனால் பலனற்ற திட்டங்கள் மற்றும் சட்டமூலங்கள் குறிப்பாக அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றவியல் சட்டக்கோவையின் திருத்தச் சட்டமூலம் எல்லாம் பிரதமர் ஹரிணியின் யோசனைகள் என பொதுமக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு பல பிரச்சினைகள் அரசுக்குள் உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















