தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிப்பவர் அல்ல. மாறாகத் தமது நாட்டுக்கும் தமது சமூகத்துக்கும் சேவையாற்றுபவர் மாத்திரமேயாகும். அதிகாரம் என்பது அலங்காரத்துக்கானது அல்ல. மக்கள் கூட்டமொன்றின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் கருவியாகும் என்பதை எந்தவொரு தலைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கிரில்லவெல வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியாகவும், சட்டத்தை மதிக்கும் வகையிலும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும், மற்றவர்களுக்குச் செவிசாய்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற கிரில்லவெல மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச மட்டத்தில் மாணவர் பாராளுமன்றங்கள் செயற்படும் விதம் தொடர்பில் விளக்கமளித்த குழுக்களின் பிரதித் தவிசாளர், இந்த நாட்டில் மாணவர் பாராளுமன்றங்கள் மூலம் தங்கள் பாடசாலைகளுக்கு மாத்திரமல்ல, முழு சமூகத்திற்கும் பயனளிக்கும் மாற்றங்களைச் செய்வதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயற்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, மாணவர் பாராளுமன்றங்கள் மாணவர்களின் ஆளுமைகள் மற்றும் திறமைகளை வளர்ப்பதில் பெரும் உதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், பாராளுமன்ற சட்டவாக்க நடைமுறைகள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்தும் அவர் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் ஏனைய விருந்தினர்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, கிரில்லவல மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.டபிள்யூ.எம்.ஏ. பண்டார வீரசிங்க மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

















