பாடசாலை நேரம் பிற்பகல் 2மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்.
பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை நேரம் பிற்பகல் 2மணிவரை நீடிக்கப்படும். அவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். உதாரணமாக குறிப்பிடுவதானால் முதலாம் தர மாணவர்களின் பாடசாலை நேரத்தில் மாற்றம் ஏற்படாது.
தற்போது காலை 7.30 மணியிலிருந்து 11.45மணி வரையான காலம் அவ்வாறு நீடிக்கப்படும். இரண்டாம் தரத்துக்கும் 7.30 மணியிலிருந்து 11.45 மணி வரையிலான கற்றல் நடவடிக்கைகள் அவ்வாறே முன்னெடுக்கப்படும்.
3, 4ஆம் தர மாணவர்களுக்கு 7.30 மணியிலிருந்து 1மணி வரையான கற்றல் காலம் அவ்வாறே இடம்பெறும். அதிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
5 ஆம் தரத்திலிருந்தே நேர மாற்றம் ஏற்படும். 5ஆம் தர மாணவர்களுக்கு 7.30 மணியிலிருந்து 2.00 மணிவரை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும். அதாவது 6ஆம் தரத்திலிருந்து எதிர்வரும் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 மணிமுதல் பகல் 2மணிவரை இடம்பெறும் – என்றார்.


















