ஊழல் மோசடிககளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வங்குரோத்து அடைந்த, மக்கள் வரிசையில் இருந்து உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டிய அரசாங்கத்தை பெற்றுக்கொண்டபோதும் ஒரு வருட காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்துக்கு முடியுமாகி இருக்கிறது. இதன் காரணமாக தரப்படுத்தல் நிறுவனங்களால் எமது பொருளாதாரத்தை தரம் உயர்த்தி இருக்கிறது.
நாட்டை அபிவிருத்தி செய்வதாக இருந்தால், நாட்டில் ஊழல் மோசடிகள் இல்லாமலாக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான சட்ட திட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். அப்போதுதான் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.
நிறுத்தப்பட்டிருந்த பல வேலைத்திட்டங்களை வெளிநாட்டவர்கள் இன்று ஆரம்பித்திருக்கிறார்கள். அரசாங்கம் ஊழல் மோசடிகளை நிறுத்துகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் மீண்டும் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வருகிறார்கள்.
பிரபுக்கள் அரசியல் கலாசாரத்தை நிறுத்தி இருக்கிறோம். அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு கீழ்ப்பட்டவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம் என்றார்.


















