இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
மேலும், அமெரிக்க விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்1பி விசா கட்டணம் 88 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சுற்றுலா விசா, மாணவர் விசா, வணிக விசாவைப் பெற்று அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டினர் உடல்நிலையைக் காரணம் காட்டி அமெரிக்காவில் நீண்டகாலம் தங்குகின்றனர். அமெரிக்க அரசின் சுகாதார திட்டப் பலன்களை வெளிநாட்டினரும் பெறுகின்றனர். இதனால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
இதை தடுக்க, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், விசா விண்ணப்பதாரர்களின் வயது, நிதி நிலைமை குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


















