மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட 70 வயது முதியவர் இறுதிச்சடங்கில் எழும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அவருடைய மகன் கருத்து தெரிவிக்கையில், என் தந்தைக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது, ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்து, அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. நீண்ட காலமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தோம்.
வியாழக்கிழமை மருத்துவமனையில் அவரது உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்ட பிறகு, அவர் சுவாசிப்பதை நிறுத்தினார். இதனால் அவர் இறந்துவிட்டதாக கருதினோம். எனது தந்தையின் மரணம் குறித்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டேன், அதோடு இறுதிச் சடங்கு ஊர்வலம் பற்றிய விவரங்களையும் வெளியிட்டேன்.
இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம், என் உறவினர்களும், அறிமுகமானவர்களும் வீட்டில் கூடத் தொடங்கினர். இருப்பினும், வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அரை மணி நேரத்திற்குள், தந்தை மீண்டும் சுவாசிக்கத் தொடங்கினார். இந்த நிகழ்வை ஒரு அதிசயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


















