டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய் உதவியுடன் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் இராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா ஆகிய இரண்டும் வெளிமாநிலங்களை சேர்ந்த அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதி என்பதால் ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர், மேலதிக பொலிஸ் கண்காணிப்பாளர், பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் அரச விடுதிகளில் 12 குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், விடுதிகளில் உள்ள நபர்களை விலாசம் மற்றும் அவர்களின் ஆதார் இலக்கம் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு அறையிலும் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 25 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பதிவெண் கொண்ட வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பின்னர் ராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
15 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாநிலங்களில் இருந்து ரயில்கள் வந்து செல்வதால் ‘தேவசேனா’ என்ற வெடிகுண்டு கண்டறியும் நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புபிரிவு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மற்றும் உத்தரகோசமங்கை கோயிலில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் உச்சப்புளி ஐஏஎஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர்கள் மூலமாக வான்வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, ஏர்வாடி ராமேஸ்வரம் ஆகிய மூன்று கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏர்வாடி தர்கா சுற்றுவட்டார பகுதியில் இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

















