-பா.சதீஸ்-
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை வாங்கிச் சென்ற சோற்றுப் பாசலுக்குள் இருந்த மீன் பொரியலுக்குள் புழு காணப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த நபரொருவர் மதிய உணவிற்காக குறித்த உணவகத்தில் இருந்து ஐந்து பார்சல் உணவுகளை வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் உணவை அவிழ்த்து சாப்பிடும் போது, உணவில் இருந்த மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பதை அவதானித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதாரப் பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதனை செய்தனர். இதன் போது அவ்வுணவகம் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டு வந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


















