2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பல வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்றுள்ளது.
இவர்களின் இயலாமையே இதற்கு காரணமாகும். அதனால் அரசாங்கம் தேர்தலை நடத்தினால் நிலையை தெரிந்து கொள்ளலாம். ஆனால் அரசாங்கம் மாகாணசபை தேர்தலை, அடுத்த வருடத்திலும் நடத்தப்போவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜிவ சேனசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கத்துக்கு இதற்கு முன்னர் ஆட்சி செய்த அனுபவமில்லை. என்றாலும் தேர்தல் காலத்தில் இவர் கள் மக்களுக்கு அளித்துவந்த வாக்குறுதிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து, இவர்களுக்கு ஒருதடவை கொடுத்துப் பார்ப்போம் என்றே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆட்சி வழங்கி இருக்கின்றனர். தற்போது மக்கள் அதுதொடர்பில் கைசேதப்படுகின்றனர்.
ஜனாதிபதி அடுத்த வருடத்துக்காக சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்ப்பாக்கப்படும் விடயங்களே அதிகமாக இருக்கின்றன.
ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் நாடொன்றின் அபிவிருத் திக்கு பிரதானமாக 4 விடயங்கள் தேவைப்படுகின்றன.
அதாவது வருமானத்தை அதிகரிப்பது, நேரடி முதலீடு, தொழில் உருவாக்குதல் மற்றும் நவீன தொழிநு ட்பம். இவற்றை மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் இருக்கும் பிரேரணைகள் என்ன?
இதனை அடைந்துகொள்ளாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் 11 சட்ட மூலங்களை சமர்ப்பித்திருந்தது.
அதில் ஒன்றைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றவில்லை. அதேபோன்று கடந்த வருடம் வரவு செலவு திட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கிய பணத்தை இவர்களுக்கு செலவழிக்க முடியாமல் போயிருக்கிறது.
இவை மக்களுக்கு வழங்கவேண்டிய சேவைகளை நிறைவேற்ற தவறிய குற்றத்துக்காக சிறைக்கு செல்லக்கூடிய தவறாகும் என்றார்.


















