தமது பாதீட்டுக்குத் தாமே கைதட்டிக் கொள்ளும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதீடு மீதான மூன்றாம் நாள் விவாதத்தல் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
அரசாங்கம் வாக்குறுதி அளித்ததற்கமைய, 35ஆயிரம் தொழில்கோரும் பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புகள் தொடர்பில் இந்த பாதீட்டில் அரசாங்கம் எந்தவொரு விடயத்தையும் முன்வைக்கவில்லை.
இவ்வாறான நிலையில், நாட்டில் 40 முதல் 50 சதவீதம் வரையான மக்கள் வறுமையினால் கஷ்டத்திற்கு உள்ளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் கூறுவதற்கு ஏற்றால்போல் தலை அசைக்கின்றது.
இதற்கமையவே 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு உருவாக்கப்பட்டுள்ளது. பாதீட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அல்ல. சர்வதேச நாணய நிதியமே அதனை உருவாக்கியுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், பழைய கடன்களைச் செலுத்தாது புதிய கடன்களைப் பெறுவதன் மூலம் இந்த நாட்டை காலம் முழுவதும் பாதாளத்திற்குள் விழவைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
கோட்டாபய பயணித்த அதே வழியிலேயே இந்த அரசாங்கமும் பயணிக்கின்றது.
அதேவேளை, இன்று நாட்டு மக்களை வரியால் நெரிக்கும் நிலைமையுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கு 15 சதவீதமாக இருக்கும் நிலையில் அரசாங்கம் வரியின் மூலம் 15.9 சதவீதத்தை வருமானமாக ஈட்டிக் கொள்கின்றது என்றார்.


















