வட மாகாண தாதியர் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பினரிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா எம்.பி கூறுகையில்,
புதன்கிழமை மன்னார் மாவட்டம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் தாதியர் உத்தியோகத்தர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்ந்தும் நடந்தால் வடக்குமாகாண பொதுமக்கள் தேவையில்லாத பிரச்சினைக்கு உள்ளாகுவார்கள். எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள தாதியர் உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகளை அழைத்து சுகாதார அமைச்சில் இது தொடர்பில் கலந்துரையாடி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றார்.
இதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளிக்கையில்,
வடக்கில் நடந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் என்னுடன் கலந்துரையாடினர். அந்தப் போராட்டம் ஒருநாளே நடந்தது. குறிப்பாக தாதியர் உத்தியோகத்தர்களின் வரவு பதிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பில் மாகாண செயலாளர் மற்றும் ஆளுநர் அடங்கலாக மாகாண பிரதானிகள் ஆகியோருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அந்த கலந்துரையாடலுக்கமைய இணக்கப்பாட்டுக்கு வரமுடியும். எவ்வாறாயினும் வைத்தியசாலை பணியாளர்களின் வருகை தொடர்பில் கணக்காய்வொன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே மாகாண சபை இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பில் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார்.


















