2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. 2ஆம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகி 6ஆவது நாளாக இன்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது
இதன்போது இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவா எதிராகவா வாக்களிப்பது என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக கூடி ஆராய்ந்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள், மலையகக்கட்சிகள் இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லையெனக் கூறப்படுகின்றது. இதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதிவரை நடைபெற்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.


















