பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை இயற்றுவதற்கான வரைவு தமிழ், சிங்கள மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்ட வரைவு வெகுவிரைவில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்:-
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம். வழங்கிய வாக்குறுதியை நாங்கள் மறக்கவில்லை. நாட்டு மக்களுக்கு பொருத்தமான வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படும் அத்துடன் பழமையாக சட்டங்களும் மறுசீரமைக்கப்படும்.
அரசியல் தேவைக்காக சட்டங்களை நாங்கள் இயற்றவில்லை. நாட்டு மக்களின் தேவைகளுக்காவே சட்டங்களை இயற்றுகிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழு சட்ட வரைவினை சமர்ப்பித்துள்ளது. அந்த வரைவு தமிழ், சிங்கள மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்படுகிறது. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்ட வரைவு வெகுவிரைவில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும்.
இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பல சிறந்த சட்டங்களை இயற்றியுள்ளோம். பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் பல சட்டங்களை இயற்றுவோம் என்றார்.



















