-சொ.வர்ணன்-
நாட்டில் நேற்று 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதிகூடிய மழை வீழ்ச்சியாக யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் 101.7 மி.மி மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ். மாவட்டத்தில் நேற்று 24 மணித்தியாலத்துக்குள் கிடைக்கப்பெற்ற அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் மழை இன்று செவ்வாய்க்கிழமை வரை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கடற்தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. எனவே கடற்தொழில் நடவடிக்கைகளின் போது மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் – என்றார்.


















