வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன் நெற்பயிர்களை சேதப்படுத்தி தேக்கு மரங்களை நட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாங்கள் பூர்வீகமாக குறித்த காணிகளில் பயிர்செய்து வந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரினால் இடம்பெயர்ந்திருந்தோம். மீண்டும் 2012 ஆம் ஆண்டு மீள் குடியமர்த்தப்பட்டதுடன் எமது காணிகளில் நெற் பயிர்செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
தற்போது 13 ஆண்டுகளின் பின் வனவளப் பிரிவு உத்தியோகத்தர்கள் எமது காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கு விதைக்கப்பட்டுள்ள பயிர்களை அழித்து தேக்கு மரம் நடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது உழவு இயந்திரங்களை விவசாய பயிர்களுக்கு மேலாக ஓட்டிச் சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த காணிக்கான ஆவணங்களை வழங்க அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆவணமும் எங்களிடம் இருக்கிறது.
எனவே வனவளத் திணைக்களத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி எமது பூர்வீக காணிகளை மீளவும் பெற்றுத் தருமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என அந்த விவசாயிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.


















