-பிரதேச மக்கள் மாநகரசபைக்கு முறைப்பாடு-
-இ.கலைஅமுதன்-
யாழ். மாவட்டச் செயலகத்தில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் காரணமாக கச்சேரி – நல்லூர் வீதியில் போக்குவரத்துச் செய்ய முடியாத அவலம் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தில் இருந்து தினமும் அதிகளவான நீர் கடவுச் சீட்டு அலுவலக நுழைவாயில் அருகே துளை இடப்பட்டு வீதியில் வெளியேற்றப்படுவதனால் வீதியோரம் உள்ள அகலம் குறைந்த வாய்க்கால் ஊடாக வெளியேற முடியாது வீதியில் பரவி அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுவது தொடர்பில் மாநகர சபையின் முதல்வரை தொடர்பு கொண்டு கேட்டபோது இது தொடர்பில் இருமுறை எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அரச திணைக்களம் என்ற வகையிலும் அவர்களும் மக்களிற்கான சேவை வழங்கும் நிறுவனம் என்பதனையும் கவனத்தில் கொண்டு முதல் கட்டமாக இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி செயலக வளாகத்தில் ஓர் கழிவு நீர்த் தொட்டி முறைமையை ஏற்படுத்தி, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது.
இருந்தபோதும் இதனால் பொதுமக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு சட்ட வரையறைக்குள் மாநகரசபைக்கு உள்ள அதிகார வரம்புக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – என்றார்.
இந்த விடயத்தில் பொதுமக்களின் கருத்து மற்றும் மாநகர முதல்வர் அனுப்பிய கடிதம் ஆகியவை தொடர்பில் மாவட்ட அரச அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது மாவட்ட செயலக வளவினுள் தேங்கும் வெள்ள நீர் மட்டுமே அப்பாதை ஊடாக வழிந்தோடுகின்றது.
மாநகரசபை அறிவுறுத்தியமை போன்று கழிவுநீர் வெளியேற்றப்படவில்லை. மாவட்டச் செயலக நீரை வேறு மார்க்கம் ஊடாக உடனடியாக திருப்பும் வாய்ப்பு காணப்படவில்லை. இருந்தபோதும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலை பெற்று மாற்று ஏற்பாடு தொடர்பில் ஆராயப்படும் என்றார்.


















