-சி.ஜெகதீஸ்வரன்-
பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கடல் தொழிலாளர்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கொட்டடி கடற் தொழிலாளர் கூட்டுறச்ச ங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பேரணி கொட்டடி மீன் சந்தைக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி கடற்கரை வீதி வழியாக பருத்தித்துறை நகர சபையை சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்டோர் அகற்று, அகற்று மண்ணை அகற்று, பருத்தித்துறை நகர சபையே மண்ணை அகற்று ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு நகர சபை வாசலை சென்றடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திறகு வருகை தந்திருந்தனர். பரீட்சை நிலையம் அருகில் இருப்பதன் காரணமாக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு பொலிஸார் போராட்டக்காரர்களை வேண்டிக் கொண்டனர்.
இதனை அடுத்து போராட்டக்காரர் அமைதியாகினர். எழுத்துமூலமான கோரிக்கையை வழங்குமாறும் பொலிஸார் கோரினர்.
தவிசாளரை வருமாறு போராட்டக் காரர்கள் கோரினர். சற்று நேரத்தில் தவிசாளர் நகரசபைக்கு வருகை தந்ததை அடுத்து போராட்டக்காரருடன கலந்துரையாடினார்.
மணலை அகற்றாமைக்கான காரணத்தை கேட்டு போராட்டகாரர்கள் வாக்குவாதப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்புத் திணைக் களத்தின் அதிகாரிகளை இன்று நகர சபைக்கு அழைப்பதாகவும் இதன்போது கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் வருகை தந்து கலந்துரையாடி அதன் பிரகாரம் மணலை அகற்ற முடியும் எனவும் தவிசாளர் தெரிவித்து மகஜரை பெற்றுக் கொண்டார்.



















