பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்துவதற்கு முயற்சிக்கிறார்கள், அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது, என கூறியிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்த நாட்டில் இனவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முகங்களில் வந்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழும் போது, ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், ஜனநாயக ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகிய காரணங்கள் இருந்தன. ஆனால் இப்போது எங்கள் அரசாங்கத்தின் மீது இதுபோன்ற எந்தக் குற்றச்சாட்டுக்களும் கிடையாது.
தோல்வியடைந்த தரப்புகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்திற்கான நியாயப்படுத்தக்கூடிய தொனிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இனவாதத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுகின்றது. பொலிஸார் சட்டத்தை செயற்படுத்தும்போது சமூகத்தில் ஏற்படக்கூடிய குழப்ப நிலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கையொன்றை கோரியிருந்தேன். அதன்படி பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் புத்தர் சிலை அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையப் பதிவுகளில் உள்ளன. அடுத்ததாக இந்த மோதல் பொலிஸாருக்கும் இனவாதக் குழுக்களுக்கும் இடையிலேயே ஏற்படும். இதனால் மீண்டும் அந்த புத்தர்சிலை அந்த இடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 2014இல் வழங்கப்பட்ட உரித்தொன்று இருக்கின்றது. இவ்வளவு காலம் இது விகாரை யாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த சிற்றுண்டி சாலையின் சட்டவிரோத நிர்மாணம் இருப்பதாக அதனை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் அதனை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும், கரையோர பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தி கலந்துரையாடலின்போது பிக்கு ஒருவர் இதற்காக ஒருவார கால அவகாசம் கோரியுள்ளார். இந்த அவகாசம் 14ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
இவ்வாறான நிலைமையிலேயே புத்தர் சிலை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. இது மத வழிபாட்டிடத்தை அமைப்பதுபோலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாக தெரிகின்றது. அதனை விகாரைக்கு சொந்தமான இடம் என்பதால் இதில் விகாரை இருந்ததாக பொதுமக்கள் நினைக்கலாம். ஆனால் விகாரையின் தேரர் ஒருவருக்கு சொந்தமான இடமொன்று இருந்தது. கரையோர பாதுகாப்பு அதிகாரசபைக்கு சொந்தமான பகுதி மற்றும் விகாரைக்குரிய காணி ஆகியன அளக்கப்பட்டு அதனை பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றம் அங்கே புதிய கட்டிடங்களை அமைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள். இனவாதிகள் இனவாதத் தீயைப் பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.
இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் மட்டுமல்ல இந்த நாட்டின். பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்கப் போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது.
இது வரலாற்றில் மட்டுமே இருக்கும். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இலங்கையில் இனவாதம் எழுதப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.


















