-ஐ.ம.ச எம்.பி முஜிபுர் ரஹ்மான்-
இலங்கையில் இருக்கும் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவையும், பயங்கரவாதத் தடுப்பு விசாரணை பிரிவையும் இஸ்ரேலின் மொஸாட்டா நிர்வகிக்கின்றது? என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அர்ஷாத், அண்மையில் கொழும்பு நகரில் இருக்கும் சட்ட விராதே இஸ்ரேல் சபாத் இல்லங்களை மூடிவிடுவதற்கு பிரேரணை ஒன்று கொண்டுவந்துள்ளார். உடனே பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு குறித்த உறுப்பினரை அழைத்து, ஏன் இந்த பிரேரணை கொண்டுவர வேண்டும் என கேள்வி கேட்கிறார்கள். இலங்கையில் இருக்கும் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவையும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவையும் இஸ்ரேலின் மொஸாட்டா நிர்வகிக்கின்றது? பலஸ்தீன் தொடர்பில் யாராவது கதைத்தால், டி.ஐ.டியும். சீ.ஐ.டியும் அழைத்து விசாரணை மேற்கொள்கின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காகூட இவ்வாறு செயற்படுவதில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சிலர் அரசுக்குள் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனால் அரசாங்கத்துக்குள் இருக்கும் அரசை விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 வெளிப்படுத்துவதாக தெரிவித்த காலம் தற்போது முடிந்துவிட்டது.
வெளிநாடுகளில் இருக்கும் குற்றவாளிகளை கைதுசெய்ய சிவப்பு பிடியாணை விடுக்கும் அரசாங்கம், ஏன்இந்தியாவில் இருக்கும் சாரா ஜெஸ்மினை கைதுசெய்ய சிவப்பு பிடியாணை பிறப்பிக்காமல் உள்ளது எனக்கேள்வி எழுப்பினார்.


















