சம்பள அதிகரிப்பு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடாதபோதும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உணர்ந்து சம்பளத்தை அதிகரித்துள்ளோம் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
போதைப்பொருளுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை ஒருபோதும் இடைநிறுத்தப் போவதில்லை. ஜனாதிபதி தலைமையில் இன்று வியாழக்கிழமை தங்காலைப் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படும்.
போதைப்பொருள் வர்த்தகத்திலும், பாதாளக் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தவர்கள் தான் இன்று போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
நாட்டு மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஓய்வூதியகாரர்களின் கொடுப்பனவு பற்றி எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். ரணில், மைத்திரி மற்றும் சஜித் அரசாங்கம் தான் இந்தப் பிரச்சினையை ஏற்படுத்தியது. சம்பள அதிகரிப்பு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்து சம்பளத்தை அதிகரித்துள்ளோம் என்றார்.


















