-முறையான திட்டம் உருவாக்கப்படும் என்கிறார் அமைச்சர்-
உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் மூலம் ஒரு முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் வெளியிடும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், அரசாங்கம், கமத்தொழில் திணைக்களம் மற்றும் விவசாயிகள் என்று, மூன்று தரப்பினராக தனித்தனியாகச் செயல்படாமல், அனைவரும் ஒரே தளத்தில் ஒரே நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவாகச் செயல்பட வேண்டும்.
விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படும். உருளைக்கிழங்கு உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக தரமான உரங்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளைத் தயாரிப்பதற்கும், உயர்தர விதைகளை உற்பத்தி செய்வதற்கும் விவசாயிகளுடன் இணைந்து கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் எதிர்காலத்தில் செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும்.
உருளைக்கிழங்கு விவசாயிகளுக்குத் தேவையான அரசாங்க தலையீடுகளை நெறிப்படுத்த விவசாயிகள் பதிவுத் திட்டம் ஆரம்பிக்கப்படும். விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்கி, அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


















