தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படுவதனால் உங்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படுமென்பதால் அக்கட்சி பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாமென தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட எம்.பி.யான இளங்குமரனுக்கு தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி.யும் வைத்தியருமான ப.சத்தியலிங்கம் ஆலோசனை கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட ஆலோசனை முன்வைத்து மேலும் தெரிவிக்கையில்:
ஜனாதிபதியுடன் புதன்கிழமை நடத்திய சந்திப்பின் போது அரசியலமைப்புக்கமைய அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினோம். ஜனாதிபதி விடயங்களை பொறுமையாக கேட்ட நிலையில், நாட்டில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார்.
ஆகவே அரசியல் தீர்வு விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
சபையில் இளங்குமரன் எம்.பி தமிழரசுக் கட்சிப் பற்றி பல விடயங்களை குறிப்பிட்டார். ‘தம்பி இளங்குமரன், நீங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி பற்றி கவலைப்பட வேண்டாம். இவ்வாறு கவலைப்படுவது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். ஆவி சீக்கிரம் போய்விடும். தமிழரசுக் கட்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ – என்றார்.


















