வடக்கு மாகாண சுதேச மருத்துவத்துறையை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மருந்துக் கலவையாளர்கள் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்கள் தடையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன், 2026 ஆம் ஆண்டில் குறித்த ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும்பேசுகையில், சுதேச மருத்துவத்துறைக்கு இம்மாதம் தங்களால் வழங்கப்பட்ட 303 மருத்துவர் நியமனங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கான 36 மருத்துவர் நியமன முன்மொழிவுகளில் 29 மருத்துவர் முன்மொழிவுகள் வன்னி மாவட்டத்திற்கு கிடைத்துள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் நிலவிய பெரும்பாலான சுதேச மருத்துவர் வெற்றிடங்கள் தற்பொழுது நிரம்பியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து சித்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 63. தற்போது இங்கு 35 பணி வெற்றிடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 45 சதவீதமான ஊழியர் அணியுடனே முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவ அலகுகள் பணிபுரிகின்றன.
2025 இன் முதல் எட்டு மாதங்களிலும் சராசரியாக 1000 நோயாளிகளுக்கு மேல் மேற்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இன்னமும் அதிகமாக நோயாளிகளை உள்ளீர்த்து சேவை வழங்குவதில் உள்ள முதன்மையான பிரச்சினை குறித்த மருத்துவமனைகளில் உள்ள ஆளணிப்பற்றாக்குறையே. சுதேச மருத்துவத் துறையில் தரமான மருத்துவ சேவை வழங்கலுக்கு மிகவும் இன்றியமையாத சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்கள் வன்னி மாவட்டத்தில் மட்டுமல்ல. இத்தேவை வடமாகாணம் முழுதும் காணப்படுகிறது.
வடமாகாணம் முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்கள் சித்த மருத்துவத்துறையில் உள்ளன.
மருத்துவ சேவை வழங்கலின் தரத்தை அதிகரிப்பதற்கு, மேற்படி சேவை நிலையங்களில் உள்ள ஏனைய ஆளணி வெற்றிடங்களை 2026 ஆம் ஆண்டு பகுதியளவிலேனும் நிரப்புவதற்கான வாய்ப்பு உள்ளதா? எனக்கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வடக்கில் என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்தியசாலைகளிலுள்ள ஆளணிப்பற்றாக்குறைக்கு மிக விரைவாக தீர்வுகள் எட்டப்படும் எனத் தெரிவித்தார்.


















